இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Sunday, December 2, 2007

ஆத்தா

அம்மாவின் வேப்ப மர ஆத்தா
இப்போதும் பயமுறுத்துகிறார்
அருகில் போகும்போது

நள்ளிரவு சாமத்தில்
நொடிச்சான் மகன்
பாம்பு கடித்து
இறந்ததிலிருந்து
அதிகரிக்கிறது
ஆத்தா பற்றிய பயம்.

ஆத்தாவுக்கும்
பாம்புக்குமான உறவு பற்றி
இதுவரை அம்மா சொன்னதில்லை

எப்போதாவது
எதிர்படும் பாம்புகளை
ஆத்தாவாகவும்
வேப்பமரங்களை
பாம்பாகவும் பார்க்கின்ற
குழப்பத்தில்
இரவுகள் நீர்த்துபோகின்றன.

இரண்டு முட்டைகளை திருடி
முந்தா நாள் குடித்ததற்காக
அடிக்கிறாள் அம்மா.
ஆத்தா அடிப்பதாகவே
படுகிறதெனக்கு.

-தினகரன் தீபாவளி மலரில் வெளியான எனது கவிதை

4 comments:

☼ வெயிலான் said...

கவிதையில வேற கலக்குறீங்களே அண்ணாச்சி!

துளசி டீச்சருக்கு நீங்க கவித எழுதுற விசயம் தெரியாதோ?

ஆடுமாடு said...

அண்ணாச்சி. சும்மா படிக்கும் போது கிறுக்குத்தனமா ஆரம்பிச்சது. ஊர் ஞாபகம் வந்தா இப்படி எதையாவது எழுதி தணிச்சுக்குவேன்.

மா.கலை அரசன் said...
This comment has been removed by the author.
மா.கலை அரசன் said...

நல்லாவே எழுதரீங்க....
கிராமத்து நினைவுகளை கிளரி விடரீங்க...