இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Friday, February 13, 2009

இலங்கையில் நடப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே!

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில்
இலங்கையில் நடப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே!


முந்தைய ‘த சன்டே இந்தியன்’ இதழில் த சன்டே லீடரின் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கே எழுதியிருந்த கட்டுரையை வெளியிட்டிருந்தோம். தான் கொல்லப்படப்போகிறோம் என்பதை முன்பே அறிந்திருந்த அவர் எழுதிய கட்டுரை அது. அத்துடன் தன்னுடைய நீண்டகால நண்பரும், தற்போதைய இலங்கை அதிபருமான மகிந்தா ராஜபக்சேவுக்கும் தன்னைக் கொல்பவர்கள் யாரென்று தெரியும் எனவும் அவர் எழுதியிருந்தார்.

விடுதலைப்புலிகளுக்கும் அரசுப் படையினருக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் இலங்கையில் கிட்டத்தட்ட முற்றுபெறும் நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. உலகின் பயங்கரமான அமைப்புகளில் ஒன்றான புலிகள் தோற்கடிக்கப்படுவது பெரிய செய்திதான். (இந்தியாவின் சுறுசுறுப்பான பிரதமர்களில் ஒருவரான ராஜிவ்காந்தியின் கொலைக்குக் காரணமாக இருந்த அமைப்பு என்பதாலும்).

ஆனால் இன்னொருபுறத்தில் போர் என்ற பெயரில் தற்போதைய அரசு, தமிழ் இனத்தைக் களைவதன் மூலம் மிகப்பெரிய மனித அவலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால் இனப்படுகொலை!

புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போரில் இன்று 2,50,000 தமிழர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வித்தியாசப்படுத்திப் பார்க்க தற்போதைய அரசு எந்தவிதத்திலும் விரும்பவில்லை.

அதுமட்டுமல்ல, பத்திரிகைத் துறையை எடுத்துக்கொண்டால் எதிர்ப்புக்குரல் எந்தவிதத்தில் எழுந்தாலும் அதை மூடுவதற்கு சிறையில் போடுவது அல்லது திட்டமிட்டு கொலை செள்வது போன்றவற்றில் சிங்கள அரசு ஈடுபடுகிறது. தற்போதைய ஆட்சியின்கீழ் உலகில் பத்திரிகையாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் மிகமோசமான இடங்களில் ஒன்றாக மாறும் அளவுக்கு நிலைமை மிகவும் சீரழிந்து போயிருக்கிறது.

பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகளின்படி, ஈராக்குக்கு அடுத்தபடியாக உலகில் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாவது மிகப்பெரிய ஆபத்து உள்ள இடமாக இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. லசந்தா விக்ரமதுங்கே போல பல பெரும்பாலான மரியாதைக்குரிய பத்திரிகையாளர்கள் ஒன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது முழுமையாக காணாமல்போள்விட்டனர். ஜனவரி 2006லிருந்து ஏறக்குறைய 9 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் பயங்கரவாதம் புதிய விஷயமல்ல. நமது பழைய அனுபவங்களின்படி, ஓர் இனத்தையே ஒருசிலர் செய்த குற்றங்களுக்காக திட்டமிட்டு
தண்டிக்க முயற்சி செய்யும் எந்த முயற்சியும் பின்விளைவுகளை ஏற்படுத்தாமல் இருந்ததே இல்லை. பிரதமர் இந்திரா காந்தி அவருடைய சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது இதற்கு உதாரணமான ஒரு விஷயமாகும்.

ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இதே இனம்தான் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி பஞ்சாப் இந்தியாவின் ஒரு பகுதியாக இன்னும் தொடருவதற்கு வழிகோலியிருக்கிறது. இந்திய அரசு சாமானிய சீக்கியர்களின் மனத்தில் நம்பிக்கையை விதைத்து அவர்களையும் பாதித்துவந்த பயங்கரவாதத்தை எதிர்க்க ஆயுதங்களைக் கொடுத்ததால்தான் இந்திய அரசு இந்த விஷயத்தில் வெற்றிபெற முடிந்தது.

விமானப்படை மூலம் குண்டுகளை வீசாமல் இருந்திருந்தால் புலிகளுக்கு எதிராக வெற்றிபெறும் நிலைக்கு இலங்கை அரசு வந்திருக்காது என்பது உண்மைதான். ஆனால் இந்த வான்வழி தாக்குதல்களின்போது ஏற்படக்கூடிய பொதுமக்கள் உயிரிழப்பு, அந்தத் தாக்குதலின் நோக்கத்தைவிட மிகவும் அதிகமானதாக இருக்கிறது.

பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரால் மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவைதான் குறிவைக்கப்பட்டன. அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செள்வது இந்தச் சமூகத்தை அரசின் மையநீரோட்டத்திற்கு வருவதிலிருந்து விலக்கியே வைக்கும் எதிர்வினையைத்தான் உருவாக்கும். அதன்பிறகு இப்போதைய அல்லது எதிர்கால அரசுகள் இந்த அந்நியமாதலைப் போக்குவது முற்றிலும் இயலாத காரியம். இது எதிர்காலத்திலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக அமையும்.

புலிகளுக்கு எதிரான மரபுரீதியான போர் ஓய்ந்துவிட்டதாகவே கருத்தில் கொள்ளலாம். அத்துடன் விரைவில் விடுதலைப்புலிகள் தற்கொலைப்படை தாக்குதல்களையும், கெரில்லா தாக்குதல்களையும் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள் என்பதை இலங்கை அரசு அறியும். ஆண்டுக்கணக்கில் இந்தத் தாக்குதல்களில் நிபுணத்துவம் பெற்ற அமைப்பு அது. இலங்கை அரசு தமிழர்களை ஒடுக்குவதையும், புறக்கணிப்பையும், திட்டமிட்ட படுகொலைகளையும் தொடர்ந்தால், இப்போதைய போரில் அழிவுற்றாலும், மீண்டும் இன்னொரு பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் பிறப்பார்கள்!

நன்றி: அரிந்தம் சவுத்ரி
த சன்டே இண்டியன்