இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Saturday, December 12, 2009

மாட்டின் அழுகை

என் நள்ளிரவு கனவு பற்றி இன்னும் சொல்ல வேண்டும். அது மழை பெய்த இரவு. இழுத்துப் போர்த்திய போர்வையோடு அம்மா எப்போதோ தூங்கியிருந்தாள்.
வீட்டின் ஓட்டிலிருந்து ஒழுகும் சொட்டுக்களுக்காக ஒரு சருவ சட்டியை அதன் கீழ் வைத்தேன். அதில் பட்டுத்தெறிக்கும் மழைத்துளியை, கண்களை இழுக்கும் தூக்கத்துடன் ரசித்தேன். இத்தனை நாள் இந்த ரசனை எங்க போனது என்று தெரியவில்லை.
எப்போதும் வருவது ரசனையாகவும் இருக்க முடியாது. எனனுலகம் நான்கு மாடுகள், எட்டு செம்மறியாடுகள், சுப்பையா தோப்பு, மஞ்சப்புளிச்சேரி குளம் இவற்றிற்குள்ளேயே முங்கி கொண்டிருந்தது. எனக்கும் ரசனைக்குமான விஷயங்கள் தூரமானது. ரசிப்பதையே, 'ஓ இதுதான் ரசனையா' என்று பின்னர் உணர்ந்திருக்கிறேன்.

அப்போதுதான் தொழுவத்தில் அந்த சத்தம் கேட்டது. மாட்டின் அழுகை. அதுவரை மாடுகள் அழுமென்பது தெரியாது. இன்னும் கூட அப்படி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அன்று நான் காதால் கேட்ட அழுகை.
எழுந்து பார்த்த்தபோது விரிந்திருக்கும் கப்பைக் கொம்பு பசுவிடமிருந்து அந்த சத்தம் வந்தது. கணவன், குழந்தையை இழந்து தவிக்கும் ஒரு தாயின் அவலமாக அந்தச சத்தம் கேட்டது. ம்மா என்ற சத்ததின் சோக ஒலி. அதை என் அம்மாவி்ன அழுகையாக நினைத்தேன். அம்மாக்களி்ன் அழுகை சக்தி வாய்ந்தது. அந்தக் கண்ணீ்ரின் அடர்த்தியி்ல் ஒரு கடல் வற்றும். ஒரு கடல் பொங்கும்.

அதன் கண்களிலிருந்து நீர்க்கோடுகள் விரிந்திருந்தது. மழையின் பொருட்டு கொசுவும், குளிரும் சேர்ந்து தாக்கின. என் ஒல்லி உடம்புக்கு இவை இரண்டும் எமன்கள். இருந்து்ம் அந்தப் பசு்வை நான் அருகிலிருந்து பார்த்தேன். சோகத்தின் வலிகள் ஜீரணிக்க முடியாதவை. மாடுகளுக்கும் அப்படித்தான். அருகில் படுத்திருக்கும் மாடுகள் எதையோ இழந்தது போல எழுந்து நின்று, கண்ணீர் பசுவைப் பார்த்துக்கொண்டிருந்தன.
மாடுகளின் பாஷை எனக்குப் புரியவில்லை. ஆனால், உணர முடிந்தது. தொடர்ந்து பத்து நிமிடங்கள் அந்த சோக ஒலி ஒலித்துக்கொண்டே இருந்தது.
தாங்க முடியாத குளிரின் பொருட்டும் நான் முக்காடாகப் போட்டு மூடியிருந்த சாரம் நனைந்ததன் பொருட்டும் அந்த சோகத்தை முழுவதுமாகச் சுமந்து வீட்டுக்குள் சென்றேன். எனனுறக்கம் என்னை இழுத்துச் சென்றது.
அதனதன் இழுப்புக்கு ஆட்படுவதே மனித பண்பு?

அது நிலவொளி. பரந்து விரிந்த பனங்காடு. கள் கொடுக்கும் பனை மரங்களினடியில் சாராய விற்பனை நடந்து கொண்டிருந்தது. விற்கப்படும் போதைகளுக்கு ஏற்ப பணம். கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு கடனும் உண்டு. இளஞ்சூட்டு சாராயத்துக்கான ஆட்களும், பணமும் வெவ்வேறு. குடிப்பவர்களுக்கான எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ஒன்றிரண்டாக இருந்த ஆட்களி்ன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தலைப்பாகைகளுடன் தலைகள் பெருகுகின்றன. அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன் ஆச்சர்யமாகக் கத்துகிறான். அவன் கத்தல் கேட்டு கூட்டம் திரும்புகிறது. ஒரு மாடு்ம் ஆடு்ம் ஏதோ பேசியபடி பணத்தைக்கொடுத்து சாராயம் கேட்கிறது. மாடு பேசுவதைக் கேட்டு அங்கு ஆச்சரியம் கலந்த பயம்.
போதையேறிய சிலர் கல்லெடுக்கிறார்கள். ஒருவன் பனை மட்டையை ஓங்குகிறான். 'ஏலேய்...' குரல் கேட்டு பனங்காடு அதிர்கிறது. அது மாட்டின் குரல்.
'நீ கொத்தனார் மவந்தானலே. கல்லெறிஞ்சனா ஒழுங்கா வீடு போ்ய் சேரமாட்டே. உங்கப்பனுக்கு நீ கொள்ளி வைக்கணுமா? உனககு ஒங்கப்பன் கொள்ளி வைக்கணுமா? ம்ம்ம்..." மாட்டின் அதட்டல் எதிரொலித்து வருகிறது. மட்டையை எடுத்தவன் மலைத்துப் போய் நிற்கிறான். கல்லெடுத்தவன் பயத்தில் பின்னோக்கி நகர்கிறான்.
இந்த அதிசயத்தை சாரயக்காரன் கலக்கத்தோடு கவனிக்கிறான். மாட்டின் மடியில் பெரிய பை இருக்கிறது. அதிலிருந்து ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளாக எடுத்து அவனிடம் கொடுக்கிறது. ஞாபகமாக அருகிலிருக்கும் ஆடு, பாக்கிச் சில்லறை கேட்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் சிதற, மாடும் ஆடும் அங்கேயே அமர்கின்றன. ஆடு ஊறுகாய் கேட்கிறது. மாடு தனது பையிலிருந்து எடுத்துக் கொடுக்கிறது.
உரையாடல் தொடர்கிறது.

'வர வர சரக்கு ரொம்ப கசக்குது'

'நீ நேத்தே சொல்லியிருந்தேனா, காய்ச்சிர இடத்துக்குப்போயி, இளஞ்சூட்டோட நல்ல சரக்கு அடிச்சிருக்கலாம்'

அவசர அவசரமாக குடிக்கும் ஆடு இறுமுகிறது.

'மெதுவா குடி. முந்தா நாள் பல்லிலிச்சான் வந்தான். அவசர அவசரமா குடிச்சுட்டு அங்கயே கக்கி தொலைச்சு கேவலப்படுத்திட்டான்'

'எனக்கு எவ்வளவு குடிச்சாலும் போதை ஏறாது'

இவை குடிககும் அழைகைப் பார்க்க கூட்டம் சுற்றி நின்றது.
மாட்டுக்குப் போதை ஏறுகிறது. எழுந்து நின்று தலையை அங்குமிங்கும் திருப்புகிறது. நேராக சாராயம் விற்பனி்ன் இடத்துக்கு போய் அவன் சாய்ந்திருக்கும் பனை மரத்தில் முட்டுகிறது. சரியும் மரம் வேகமாக அவன் மீது விழுகிறது. அவனுக்கு அடியேது்மில்லை. எழுந்து முதுகை துடைத்துவிட்டு 'ஏனிப்படி பண்றே' என்கிறான் மாட்டை நோக்கி. அது கேட்கிறது.

'நேத்து என் சேக்காளி கால்ல கல்லெறிஞ்சு உடைச்சது நீதானே'

'சேக்காளியா?' அவனுக்கு குலை நடுக்கம். பயத்தி்ல் உளறல்.

'நேத்து வயல்ல பயிறை மேய்ஞ்சுட்டான்னு கல்லால எறிஞ்சு அவன் காலை ஒடைச்சல்ல...இப்ப பாரு...உன்னை...'
அவன் ஓடுகிறான். உயிருக்குப் பயந்து ஓடுகிறான். ஆடு்ம் அவனைத் துரத்துகிறது.

டக்கென்று விழித்துப் பார்த்தால் விடிந்திருந்தது. மழை இல்லை. அம்மாவிடம் மாடு அழுததை சொன்னேன். அவள் ஆச்சர்யமாக கேட்டுவிட்டு சொன்னாள்;
'போ்ன வருஷம் இதே நாள்லதான் அதோட கன்னு , பஸ்காரன் அடிச்சுச் செத்துப்போச்சு".

பழைய பதிவு.

1 comment:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in